தேவேந்திர குல வேளாளர்களின் நூறாண்டு கால போராட்டம்:

தொல்காப்பியத்தில் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். தாமிரபரணி, வைகை, அமராவதி, பவானி, காவிரி, பாலாறு உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் வேளாண்மையை மட்டுமே பிரதான வாழ்வியல் ஆதாரமாகக் கொண்டு வாழக்கூடிய மக்கள். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிக அடர்த்தியாகவும், பிற பகுதிகளில் பரவலாகவும் உள்ளனர். டில்லி, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் அதிக அளவில் வாழ்கிறார்கள். அண்டை நாடான இலங்கையில் மலையகம் என்று அழைக்கப்படக்கூடிய பகுதியில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களாகவும், அந்நாட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் திரளாக உள்ளனர். அதே போன்று மலேசியா, பர்மா, ஃபிஜி தீவுகள், ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

தமிழ் மண்ணில் நில உடைமையாளர்களாக வாழ்ந்த இம்மக்களின் நிலங்கள், அன்று தமிழகத்தில் தோன்றிய சோழ அரசுகளாலும், அதற்கு பின்பு இஸ்லாமியர் மற்றும் விஜயநகர பேரரசுகளில் படையெடுப்புகளாலும் பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே நிலமற்ற வறியவர்களாகப் பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களுடைய வறுமை நிலை ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு பிரிட்டிஷ் அரசால் DC(Depressed Classes) பிரிவில் சேர்க்கப்படும் போதே, 1920-களில் அன்றைய தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகளின் சார்பாக இப்பிரிவில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

“அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்”
– என்று திவாகர நிகண்டும்,
“செருமலை வீரரும் திண்ணியோரும்
மருதநில மக்களும் மள்ளர் என்ப”

– என்று பிங்கல நிகண்டும் சொல்கின்றன.

இவ்வாறு இலக்கியங்களில் சொல்லப்பட்ட மக்களை DC பிரிவில் சேர்த்ததையும், அதைத் தொடர்ந்து SC பிரிவில் சேர்த்ததையும் வரலாற்றுப் பிழையாகவே தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் ஓரிரு சதவிகிதம் பேர் சில வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் கூட, இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அனுகூலமாக இல்லை. மாறாக தடைக் கல்லாகவே இருந்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடம் பெற்றிருக்கக்கூடிய சாதிகள் இட ஒதுக்கீட்டின் பயனையும் பெற்றுக் கொண்டு, தங்களுடைய சாதிய அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது; வளர்ச்சியும் அடைய முடிகிறது. ஆனால், SC பிரிவில் 77 சாதிகள் இடம் பெற்றிருந்தாலும் கூட, கடந்த 70 ஆண்டு காலத்தில் 77 சாதிகளும் ஒரே சாதியாகவே முத்திரை குத்தப்பட்டு விட்டன. தாழ்த்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், அட்டவணைப் பிரிவினர், தலித்துகள், அரிஜன்கள் என்ற தீண்டத்தகாத முத்திரைகள் வலிந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மீது சுமத்தப்பட்டதால், அம்மக்கள் தங்களது அடையாளத்தை முற்றாக இழக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அந்த சமுதாயத்தின் வரலாறும், அடையாளமும் மிக மிக முக்கியம். முகவரியற்ற சமுதாயங்கள் வளர்ச்சி அடைந்த வரலாறுகள் இல்லை. தாழ்த்தப்பட்டோர் என்ற முத்திரையால் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய 100 ஆண்டுகால பன்முக வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது. எனவே தான், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தார், கடையர், பள்ளர் என்ற ஆறு பிரிவுகளையும் ஒன்றாக்கி ”தேவேந்திரகுல வேளாளர்கள்” என அரசாணை பிறப்பிக்கவும், இப்பொழுது அவர்கள் இடம்பெற்றிருக்கக் கூடிய பட்டியலின பிரிவிலிருந்து நீக்கிடவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சி கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மட்டுமின்றி மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவும் முன்னெடுத்துச் சென்றது.

புதிய தமிழகம் கட்சி துவங்கப்படுவதற்கு முன்பு, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பைத் தான் துவக்கியிருந்தோம். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு துவக்கப்பட்ட முதல் போராட்டமே ’ஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர்’ என அழைக்க வேண்டும் என மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் தான். அதைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டையில் பேரணி. 1994 அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நாமக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டினுடைய மிக முக்கியமான கோரிக்கையே தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் தான். அதேபோல 1996 மார்ச் மாதம் மதுரை தெப்பக்குளத்திலிருந்து துவங்கி தமுக்கம் மைதானம் வரை லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது, அதன் முதல் தீர்மானமும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தை வலியுறுத்தித் தான் தான். அதில் முக்கிய இன்னொரு தீர்மானம“ தமிழகத்தை இரண்டாகப் பிரித்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழுகின்ற தென்மாவட்டங்களை ”தேவேந்திரர் தேசம்” என அறிவிக்க வேண்டும்” என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 1998-ஆம் இராமநாதபுரத்தில் நடந்த முதல் மாநில மாநாட்டிலும், 2000-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிலும், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற நெல்லையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிலும், 2005-ஆம் ஆண்டு கோயம்புத்தூர், 2008-ஆம் ஆண்டு மதுரை என அனைத்து மாநாடுகளிலும் புதிய தமிழகம் கட்சியின் முதன்மையான கோரிக்கையே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தான். மேலும், தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1996 முதல் 2001 வரையும் 5 ஆண்டுகாலம் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

புதிய தமிழகம் கட்சியின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக 2011-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு ஜனார்த்தனன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது.

அதன்படி, “தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிப்பது; பட்டியலிலிருந்து வெளியேற்றி தேவேந்திரர்களின் தனித்துவத்தைக் காப்பாற்றுவது” போன்ற தேவேந்திரகுல வேளாளர்களின் மூன்று நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன், புதிய தமிழகம் கட்சி கைகோர்த்துத் தேர்தலைச் சந்தித்தது; இருப்பினும் இம்மூன்று கோரிக்கைகளும் 2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னும் நிறைவேற்றப்படவில்லை.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேர்தல் முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடுவதாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியை ஏற்று, புதிய தமிழகம் கட்சி அந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்து, பிரச்சாரம் மேற்கொண்டது.

2011 முதல் 2016 வரையிலும் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தலைவர் அவர்கள் பலமுறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்; குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

2015 மார்ச் 3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான் என ஆறுவிதமான பெயர்களில் அழைக்கப்படக்கூடிய ஒரே சமுதாய மக்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என அழைத்திட அரசாணை வெளியிட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2015 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மதுரை – அண்ணாநகரில் ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று அரசாணை பிறப்பிக்க கோாி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2016-2017 ஆம் ஆண்டில் அடையாள மீட்பையும், பட்டியல் வெளியேற்றத்தையும் முன்னெடுக்க சென்னையிலே பட்டியல் வெளியேற்ற முதல் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்ட பொழுது, அந்த மாநாடு நடைபெறுமா? என்றக் கேள்வியைப் பலர் எழுப்பினார்கள்; மாநாட்டிலே மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என்றார்கள்; ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக மாநாட்டை இருட்டடிப்பு செய்தனர்.

2017-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பட்டியல் வெளியேற்ற மாநாடு.

2017 நவம்பர் 14 ஆம் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைச் சந்தித்து தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் மற்றும் அடையாள மீட்பு தொடர்பான கோரிக்கை மனுவை நேரில் சமர்ப்பித்தார்கள்.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ல் தலைநகர் டெல்லியில் 1000 பேர் திரண்டு டெல்லி மாநகரமே திரும்பிப் பார்க்கும் வகையில் பேரணியையும் நடத்தினோம்.

2018-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி மதுரையில் உண்ணாவிரதம்.

2018-ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி விருதுநகர் – பட்டம்புதூரில் உலக தேவேந்திரர் ஒருங்கிணைப்பு மாநாடு.
2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி குற்றாலத்தில் மகளிரணி மாநாடு.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி திருச்சியில் இளைஞரணி மாநாடு.

2018-ஆம் ஆண்டு நவம்பர் 15-ல் சென்னையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சிலை நோக்கி பேரணி.

2018-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி சேலத்தில் மாநாடு.

2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 15 மாவட்டங்களில் தலைவர் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான தேவேந்திரகுல வேளாளர் கிராம மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்களைத் தேவேந்திரகுல வேளாளர் ஊர் நாட்டாண்மைகள், ஊர் தலைவர்களை அழைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் நேரடியாகச் சென்று மனு அளித்துள்ளோம்.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கோவையில் உண்ணாவிரதம்.

பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் உண்ணாவிரதம்.

என புதிய தமிழகம் கட்சி சார்பாக அடுக்கடுக்கான மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
புதிய தமிழகம் கட்சியின் தொடர் போராட்டங்களின் வாயிலாக, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்; அம்மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் வாக்குறுதி அளித்துப் பேசினார்.

2019 பிப்ரவரி 25 ஆம் தேதி 16-வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய தமிழகம் கட்சி கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, 2019, பிப்ரவரி 27-ஆம் தேதி, மூத்த IAS அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்கள் தலைமையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்தது.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சுமதி அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல்(Anthropology) ஆய்வுக்குழு சார்பாக தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையும், பரிந்துரையும் தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போதும், ’தேர்தல் முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்கப்படும்’ என்று அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின், 21 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனது தாய் தொகுதியான ஒட்டப்பிடாரத்தைத் தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்காக அதிமுகவிற்கு தியாகம் செய்து, அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரமும் மேற்கொண்டார் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள். அதன் காரணமாக, தேவேந்திரகுல வேளாளர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பெருவாரியாக வாக்களித்து, 5 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து ஆட்சியைத் தக்க வைக்க உறுதுணையாக நின்றார்கள்; ஆனால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாக்குறுதியை அன்றைய அதிமுக காப்பாற்றவில்லை.

2019 ஜீலை 29 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட அமைப்புக் குழு கூட்டங்களில் கோரிக்கைகளை விரைந்து வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2019 ஆகஸ்ட் 26 ஆம் தேதி ”தேவேந்திர குல வேளாளர் அரசாணை பிறப்பித்திடுக, இல்லையெனில் கூட்டணி இல்லை” என அதிமுக அரசை எச்சரித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் எடப்பாடி. கே. பழனிச்சாமி அவர்களுக்கு நினைவூட்டல் கடிதம் எழுதினார்கள்.

தமிழ்நாடெங்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், பல்வேறு ஆர்வலர்கள் சார்பாகவும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, 16.10.2019 அன்று ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்கள் தலைமையிலான குழு கூடி, பல்வேறு அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்தது. அன்று ஹன்ஸ்ராஜ் வர்மா ஆணையத்திடம் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் நேரில் சென்று தமிழகத்தில் வாழுகின்ற தேவேந்திரகுல மக்கள் அனைவரது கோரிக்கையும் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் தான் என்பதற்கு ஆதாரமாக மத்திய, மாநில அரசுகளிடத்தில் தேவைக்கு அதிகமான தரவுகளைக் கொண்ட 300 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்து; அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து அறிக்கையை விரைந்து மத்திய அரசிற்கு தாக்கல் செய்ய வாதிட்டார்கள்.

மூத்த தமிழ்குடி மக்களின் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை, 2020 செப்டம்பர் 14 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றக் குரல் கொடுக்கவும், மாநில அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டுமென்றும் அன்றைய முதல்வர் – எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

அதே ஆண்டு, 2020 அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற பின்னரும் அரசாணை பிறப்பிக்கப்படாததால் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை ஏற்று ’தேவேந்திரகுல வேளாளர் மக்கள்’ தேர்தலைப் புறக்கணித்தார்கள்.

2020 டிசம்பர் 6 ஆம் தேதி அன்று கோவை – பொதிகை இல்லத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்ற அவசர மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் காணொளிக் கூட்டத்தில் அரசாணை – பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரிஜன், தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற முகவரியற்ற இழிவுச் சொற்களை இனியும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. பட்டியல் வெளியேற்றத்தை வென்றெடுக்க எவ்விதப் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் தேவேந்திரகுல மக்கள் அஞ்சக்கூடியவர்களும் அல்ல; தயங்கக்கூடியவர்களும் அல்ல என்பதை பறைசாற்றக் கூடிய வகையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10,000 இடங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கரோனா முழு முடக்கம் அமலிலிருந்த பொழுதும் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டு, 2020 அக்டோபர் 06-ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் நேரடியாக உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.

2021 ஜனவரி 6-ஆம் தேதி, பல்வேறு அடக்குமுறைகளைத் தாண்டி ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ மதுரை காளவாசலிலிருந்து பேரணியும், பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

2020 பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ”தேவேந்திரகுல வேளாளர் – பட்டியல் வெளியேற்றம் வென்றிட, 2021ல் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம்!” என்ற முழக்கத்துடன் ”தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடுகள்” நடைபெற்றது.

2021 பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் நமது கோரிக்கைகளை விரைந்து வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் கடந்த 30 ஆண்டுகால தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், தீர்மானங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு, சட்டமன்ற – மக்கள் மன்ற போராட்டங்களின் வாயிலாக தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையின் ஒரு பகுதியான தேவேந்திரகுல வேளாளர் அரசாணை 2021 மே 17 ஆம் தேதி மத்திய அரசிதழில் அரசாணையாக வெளியிடப்பட்து. அதைத் தொடர்ந்து 2021 ஜூன் 1 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் மாற்றமில்லை. ஆனால், பட்டியல் மாற்றம் என்பதே தேவேந்திரகுல வேளாளர்களின் நிரந்தர இலக்காகும். பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சமூக அடையாளமாகக் கருதப்பட்டாலும் பட்டியலினத்திலிருந்து விலக்கு பெறாமல் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் விடுதலை பெற்றதாகவோ, முழு அங்கீகாரத்தையும் பெற்றதாகவோ கருத இயலாது.

பெயர் மாற்றத்திற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகள் பட்டியல் மாற்றத்திற்கான கருத்துருவையும் இணைத்து மசோதாவை நிறைவேற்றி, தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டதால் நூறாண்டு காலத்திற்கு மேலாக இந்த சமூகம் அனுபவிக்கும் சமூக ஒதுக்கலுக்கும், ஒடுக்கலுக்கும்; உளரீதியான தாழ்வு சிக்கலுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும். அதற்காக புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து ஜனநாயக நீதியான, சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து பட்டியல் மாற்றத்தை அடைந்தே தீரும்.!

2021ல் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தை பெற்றோம். அதனால், அரசியல் தளத்தில் காயம்பட்டோம். காயங்கள் ஆறிப்போகும்; மாறியும் போகும்; காயம்பட்டுப் பெற்ற வெற்றி மட்டும் என்றும் நிலைத்து நிற்கும். நம்முடைய சாதனை என்றென்றும் வரலாறு பேசும்.